×

2ஜி வழக்கின் உண்மை தெரியாமல் பேசுவது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை ஆவேசம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, திமுக, காங்கிரஸ் கூட்டணியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். 2ஜியில் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார். அன்று சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையின்படி 2ஜி ஒதுக்கீட்டில் அன்றைய ஒன்றிய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், மன்மோகன்சிங் ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு சில ஆண்டுகள் நடந்து எந்த ஆதாரத்தையும் குற்றம் சாட்டியவர்கள் வழங்க முடியாத காரணத்தால் குற்றவாளிகளை நிரபராதிகள் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தமது தீர்ப்பில் கூறியிருந்தார். குற்றச்சாட்டு கூறியவர்கள் ஆதாரம் தருவார்கள் என்று பல மாதங்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தேன் என்றும் கூறியதை எவரும் மறக்க இயலாது. அநே நேரம், ஒன்றிய பாஜ ஆட்சியில் 2023 டிசம்பரில் சி.ஏ.ஜி. அளித்த அறிக்கையில், பல்வேறு துறைகளில் ரூ.7.5லட்சம் கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறியது.

இந்த ஊழல் முறைகேடுகள் குறித்து, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததைப் போல இன்று எந்த நடவடிக்கையையும் பாஜ அரசு ஏன் எடுக்கவில்லை?. தன்னை புனிதமானவர் என்ற தம்பட்டம் அடித்துக் கொள்கிற மோடி, சி.ஏ.ஜி. அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறார்? தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழ் மொழியின் மீது பாசத்தை பொழிகிறார் பிரதமர் மோடி. ஆனால், செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழிக்கு 2017 முதல் 2020 வரை ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.12.31 கோடி மட்டுமே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post 2ஜி வழக்கின் உண்மை தெரியாமல் பேசுவது பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : 2G ,Modi ,Chennai ,Tamil Nadu ,Congress ,president ,Selvaperunthagai ,Kanyakumari ,DMK-Congress alliance ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...